Wednesday, September 25, 2013

வாலி ஒரு சகாப்தம்......

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்..
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்....
என்ற உன் பாடலே என் தொடக்கம் உனக்கு அஞ்சலி செலுத்த...
நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை உள்வாங்கி
பல்லாயிரம் அழியா பிரபந்தங்கள் தந்தவன் நீ....
ராமாயண வாலி ராமனால் கொல்லப்பட்டவன்
இந்த பாராயண வாலி ராமனே விரும்பி எடுத்து கொள்ளப்பட்டவன்......
இரண்டடி குறளை ஒளித்து வைத்து இருந்த கருந்தாடியை ஊர் கண்டதுண்டு...
ஆறடிக்குள் அடங்கி போன உன் வெண் தாடியை இனி யார் காண்பார்?....
கற்பகத்தில் அத்தையின் தாலாட்டு..
கமலுக்கு உப்பு கல் காதல் பாட்டு....
வெற்றிலையும் வெண்பா கற்று கொண்டது உன் நா பட்டு
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்பு கொண்ட பயணம்
அது தொடங்கும் போது முடியும்...நீ முடிந்த பின் எங்கனம் தொடங்கும் ??
எம்ஜிஆர் நடந்தும் சிவாஜி நின்றும்
கமல் நடித்தும் ரஜினி ஓடியும் வாங்கிய புகழை
உட்கார்ந்த இடத்திலே அன்றோ நீ படைத்தாய்...
எட்டாத புகழுக்கு சொந்தக்காரரே எவரும் எட்டாத இடம் சென்று கதவுகளையும் ஏன் அடைத்தாய் ???
உன்னை பற்றி கவி எழுத எடுத்த பேனாவும் கூட
தலை கவிழ்கிறது உன் முகம் காணாமல்
நான் காகிதத்தில் கப்பல் விட்ட காலம் தொட்டே
காகிதத்தின் மேல் கவிதை கார் மேகம் இட்டவரே....
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா என்றீர்???
உன் கவிதை முழுதும் படித்து முடித்திட இருப்பேனா என்கிறேன் நான்...
உன் நாசியில் நர்த்தனம் ஆடிய காற்றுக்கும் கவிதை வாசிக்கும் ஆசை வந்து விட்டது போலும்...நீ படைத்த கவிதைகளை எங்களிடம் விட்டு விட்டு அது படைத்த கவிதை உன்னை எடுத்து கொண்டது.....
உன் வரிகளை வாசித்த இதழ்களும்...
பாடலை கேட்ட காதுகளும்....
கவிதைகளை கண்ட கண்களும் வரம் பெற்றாலும்
எந்தன் உயிர் மட்டும் இன்னும் ஊசலாடிக்கொண்டே இருக்கும்
நீ இறந்த சோகத்தினை மறக்கடிக்க உன்னை போல இன்னொருவனின் கவி இனி வர போவதில்லை என்ற ஒரே காரணத்தால்....

No comments:

Post a Comment