Thursday, September 26, 2013

ஏளனம் ......

எந்தன் மேல்சட்டையும்  என்னை ஏளனப்பார்வை வீசும்
எத்துனை முறை தான் என் மேனியையே
காண்பது என...!!!!

எண்ணம்......

என்றாவது உன்னை காண்பேன்
என்றெண்ணும் பொழுதே
வந்து விடேன்...!!!!!

உறக்கம்.....

உன்னுடன் ஊர் சுற்றுவதற்காகவே
உறங்க செல்கிறேன்
தினமும்.....

Wednesday, September 25, 2013

வாலி ஒரு சகாப்தம்......

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்..
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்....
என்ற உன் பாடலே என் தொடக்கம் உனக்கு அஞ்சலி செலுத்த...
நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை உள்வாங்கி
பல்லாயிரம் அழியா பிரபந்தங்கள் தந்தவன் நீ....
ராமாயண வாலி ராமனால் கொல்லப்பட்டவன்
இந்த பாராயண வாலி ராமனே விரும்பி எடுத்து கொள்ளப்பட்டவன்......
இரண்டடி குறளை ஒளித்து வைத்து இருந்த கருந்தாடியை ஊர் கண்டதுண்டு...
ஆறடிக்குள் அடங்கி போன உன் வெண் தாடியை இனி யார் காண்பார்?....
கற்பகத்தில் அத்தையின் தாலாட்டு..
கமலுக்கு உப்பு கல் காதல் பாட்டு....
வெற்றிலையும் வெண்பா கற்று கொண்டது உன் நா பட்டு
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்பு கொண்ட பயணம்
அது தொடங்கும் போது முடியும்...நீ முடிந்த பின் எங்கனம் தொடங்கும் ??
எம்ஜிஆர் நடந்தும் சிவாஜி நின்றும்
கமல் நடித்தும் ரஜினி ஓடியும் வாங்கிய புகழை
உட்கார்ந்த இடத்திலே அன்றோ நீ படைத்தாய்...
எட்டாத புகழுக்கு சொந்தக்காரரே எவரும் எட்டாத இடம் சென்று கதவுகளையும் ஏன் அடைத்தாய் ???
உன்னை பற்றி கவி எழுத எடுத்த பேனாவும் கூட
தலை கவிழ்கிறது உன் முகம் காணாமல்
நான் காகிதத்தில் கப்பல் விட்ட காலம் தொட்டே
காகிதத்தின் மேல் கவிதை கார் மேகம் இட்டவரே....
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா என்றீர்???
உன் கவிதை முழுதும் படித்து முடித்திட இருப்பேனா என்கிறேன் நான்...
உன் நாசியில் நர்த்தனம் ஆடிய காற்றுக்கும் கவிதை வாசிக்கும் ஆசை வந்து விட்டது போலும்...நீ படைத்த கவிதைகளை எங்களிடம் விட்டு விட்டு அது படைத்த கவிதை உன்னை எடுத்து கொண்டது.....
உன் வரிகளை வாசித்த இதழ்களும்...
பாடலை கேட்ட காதுகளும்....
கவிதைகளை கண்ட கண்களும் வரம் பெற்றாலும்
எந்தன் உயிர் மட்டும் இன்னும் ஊசலாடிக்கொண்டே இருக்கும்
நீ இறந்த சோகத்தினை மறக்கடிக்க உன்னை போல இன்னொருவனின் கவி இனி வர போவதில்லை என்ற ஒரே காரணத்தால்....

நட்பு......

அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின்
கரையாத காய தழும்பு நட்பு.....
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....
தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும் நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....
எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக
என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......
பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக
பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும் என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......
சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல்
எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....
திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும்
விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் .
"விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....
சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை
பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும்
விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....
உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும்
"என்ன ஆச்சு மாப்ள?"...........
உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை
சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........



வாழ்வு......

காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல....
அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு...
வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல..
வாங்குன வேலைய பார்க்கையிலே வெட்டியாவே இருந்து இருக்கலாம்னு தோணுது ...
எங்க வீட்டு பொறியாலன்னு என்னைய படிக்க வெச்சாங்க...
மங்கலாக நானும் படிச்சு மதுரைல இருந்து கெளம்புனேன்.....
பட்டைய போட்டு படிச்சுகிட்டு போனாலும்
நெட்டையா ஒருத்தன் வந்து உனக்கு இங்க வேலை இல்லேம்பான்...
போட்ட சட்டையும் தாகத்துல ஒரு நாளைக்கு தாங்காது...
குட்டையில கூட தண்ணீ இங்க தேங்காது.....
சென்னைன்னு அது பேரு இருந்தாலும்
தொன்னையில தான் சோறு திங்கணும்....
வேண்டி வேண்டி வேலை தேட போனாலும்
ஆண்டி கோலம் தான் திரும்பும் போது அதிகம்....
அந்த ஆண்டிய என் ஆத்தா அதிகமா வேண்டுனதுனாலவோ என்னவோ
கடைசில ஒரு வேலைய கொடுத்தான்...
கழுத்து காலர் மேல மாட்டு கயிற கொடுத்தான்.....
செக்கு மாடு வட்டம் கூட ஆரம் மாறும்.....
பத்து வருஷம் ஆனாலும் பட்டன் மட்டும் தான்....
பக்கத்துல பொண்ணாச்சேன்னு பயத்தோட நான் இருப்பேன்..
கக்கத்துல நெருப்பெடுத்து கல கலன்னு அவ பொகைக்கிரா.....
சத்தியமா புரியலப்பா சனி ஞாயிறு என்ன பண்ணணு...
குப்புறவே படுத்து கெடப்பேன் ஹோட்டல் சாப்பாடு வேணாமுன்னு .
சத்தம் இல்லாம மாமி வீட்டு சட்டி வாசம் கொடுக்கையில
சுத்தம் பண்ணாத தொண்டை சங்கு லேசா ஊதும்.....
எந்த பக்கம் போனாலும் எவனோ ஒருத்தன் குடிக்கிறான் ..
எமகாதகனா பார்த்து தான் எல்லாருக்கும் மேனேஜர் ஒருத்தன் இருக்கிறான்...
நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே நோக வைச்சாலும்...
பார்ட்டின்னு ஒன்னு வெச்சா பல்லுல மொகம் காட்டுறான்....
நட்டு வச்ச செடி கூட நல்ல பெரிய மரம் ஆயாச்சு
பொட்டு பணம் சேரலையே என் வீட்டு பொட்டியில
நாளைக்குன்னு ஒரு நாள் விடியும்னு நம்பிக்கைல தூங்குனாலும்
காலர் மேல கட்டுன கயிற மட்டும் கடைசி வர கழட்ட தைரியம் இன்னைக்கும் இல்ல.....
கடைசியா ஒண்ணு மட்டும் புரியுது.....
இதுக்கு எங்கப்பன் கையில புடிச்ச மாட்டு கயிறே மேல  தான்டோய்....